Pages

Sunday, March 2, 2025

மெல்லிசை இளவரசன் வித்யாசாகர்

இசையமைப்பாளர் வித்யாசாகரைப் பொறுத்தவரை ஒரு திரையிசை வாத்தியக்காரராக அவரின் பயணத்தை ஆரம்பித்து இது ஐம்பதாவது ஆண்டு.

ஆம், 1975 ஆம் வருஷம் தன்னுடைய 12 வது வயதிலேயே வாத்தியக்காரராகத் திரையிசைப்பாடல் உலகுக்கு வந்தவர்.

அந்தக் காலத்தைச் சொல்லும் போது, பள்ளிச் சீருடையோடு பாடல் ஒலிப்பதிவுக் கூடத்துக்குப் போவேன் என்று பூரிப்பார்.

தேவராஜன் மாஸ்டர் தொடங்கி, சலீல் செளத்ரி, ராகவன் மாஸ்டர், இளையராஜா உள்ளிட்ட திரையிசை ஆளுமைகளுக்காக இயங்கிய பாக்கியம் பெற்றவர். 15 வயதுப் பையனாக கிழக்கே போகும் ரயில் படத்துக்கு வாசித்திருக்கிறார்.

பாலைவனச் சோலை படத்தின் பாடல் பதிவில் அந்தச் சிறுவன் வித்யாசாகர் மேல் ஈர்ப்புக் கொண்ட ராபர்ட் – ராஜசேகரன் இரட்டை இயக்குநர்கள் தம் “சின்னப்பூவே மெல்லப் பேசு” படத்தில் எஸ்.ஏ.ராஜ்குமாரின் பாடல்கள் சக இசைக்கு ஒரு கட்டுக்கோப்பான இசை நடத்துநராகப் பணித்ததோடு, அந்தப் படம் தொட்டுத் தம் படங்களின் பின்னணி இசையையும் வித்யாசாகரிடமே ஒப்படைக்கின்றார்கள். அந்தக் காலகட்டத்தில் வித்யாசாகர், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் சேர்ந்து இசை படைத்த படைப்புகள் அவை.

ராபர்ட் – ராஜசேகரன் இரட்டையர்கள் பிரிந்த வேளை ராஜசேகரன் இயக்கி, நாயகனாக நடித்த “பூமனம்” வித்யாசாகரை ஒரு முழுமையான இசையமைப்பாளர் நாற்காலியில் இருத்தி அழகு பார்க்கின்றது.

இங்கே தான் ஒரு முக்கியமான விடயத்துக்கு வர வேண்டும். வித்யாசாகரின் ஆரம்பம் தொட்டு இன்றைய இயக்கம் வரை அவர் பெரும் பாடகர்களை மட்டும் முன்னுறுத்திய இசையோட்டத்தில் இருந்திருக்கவில்லை. “பூமனம்” படத்தில் எண்பதுகளில் வெற்றிக் கோலோச்சிய எஸ்.பி.பாலசுப்ரமணியம் இல்லாத அறிமுகம் என்பது அதிசயம். அதே படத்தில் பழம்பெரும் பாடகர் P.B.ஶ்ரீனிவாஸ், மலேசியா வாசுதேவன் பாடியிருந்தாலும் கூட.

இந்தச் சூழலில் தமிழில் வித்யாசாகருக்கான அடையாளம் நிறுவப்படாத சூழலில் தெலுங்கு தேசம் போனவர் அங்கே கொடுத்த ஹிட் படங்களில் எஸ்பிபி தவிர்க்க முடியாத அங்கம் ஆனார்.

தெலுங்கில் தன் ஆரம்பத்தில் கொடுத்த “தர்ம தேஜா” படத்தில் எஸ்பிபிக்கு மட்டும் ஐந்து பாட்டுகள், ஏன் அனைத்துமே எஸ்பிபி தான் என்றே சொல்லிக் கொள்ள வேண்டும்.

இங்கே தர்ம தேஜா படத்தை இன்னொரு ஒப்புவமைக்குக் கொண்டு வர வேண்டும்.

எப்படித் தன் 15 வயதில் இசைஞானி இளையராஜாவிடம் வாத்தியக்காரராக இயங்கினாரோ அதே வித்யாசாகர் தமிழில் பெரு வெற்றியடைந்த இளையராஜாவின் படங்கள் தெலுங்குக்கு வந்த போது அவற்றின் இசையமைப்பாளராக அமைந்தது தன் காலம் போட்ட அழகான கோலம். அவ்விதம் “பூந்தோட்டக் காவல்காரன்” படம் “தர்மதேஜா” ஆன போதும், “கிழக்கு வாசல்” தெலுங்கில் “சிலகபச்ச கப்பூரம்” ஆகியதும், “மல்லு வேட்டி மைனர்” தெலுங்கில் “மைனர் ராஜா” ஆன போதும், “மாமா பாகுன்னவா” தெலுங்கான “வனஜா கிரிஜா” ஆகிய போதும் வித்யாசாகரே இசை.

அங்கே தன் அடையாளத்தை நிறுவிய வித்யாசாகருக்கு வருடங்கள் கடந்து நந்தி விருதோடு, இந்தியத் தேசிய விருது கொடுத்து அழகு பார்த்தது கே.விஸ்வநாத்தின்  “ஸ்வராபிஷேகம்”. இசையை மையப்படுத்திய படத்தின் நாயகக் குரலாய் அப்படத்தில் விளங்கியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள்.

கே.விஸ்வநாத் இயக்கிய படங்களின் வழியாக திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன், இசைஞானி இளையராஜாவைத் தொடர்ந்து வித்யாசாகருக்கும் தேசிய விருது என்ற அங்கீகாரம் கிடைத்தது எவ்வளவு பெருமை.

“ஜெய் ஹிந்த்” படம் வழியாக அர்ஜீன் மீண்டும் அழைத்து வருகிறார் வித்யாசாகரை. இம்முறை அவரை விட்டுவிடத் தயாரில்லை. மாபெரும் ஹிட் படம் என்ற அங்கீகாரத்தோடு தமிழ்த் திரையுலகம் வித்யாசாகருக்குத் தொண்ணூறுகளில் சாமரம் வீசுகின்றது.

அது மட்டுமல்ல கீரவாணி (மரகதமணி) போன்றே வித்யாசாகருக்கும் தன் படங்களில் தொடர்ச்சியான வாய்ப்புக் கொடுத்துத் தமிழில் ஒரு பிடிப்பை இறுக்கியவர் அர்ஜீன். அதில் தன்னுடைய நேரடி இயக்கம் மட்டுமல்ல ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட இன்னொருவர் இயக்கிய படங்களிலும் வித்யாசாகர் இருப்பதை உறுதிச் செய்து கொள்ளுமாற்போல அந்தச் சூழல் அமைந்தது.பதிவு கானாபிரபா

வித்யாசாகருக்குத் தெலுங்குத் திரையுலகம் தீனி போட்டது அதிசயமல்ல, திரையிசையிலும் சீர் ஒழுக்கம் பார்க்கும் கேரளத்து ரசிகர்களை அவர் ஈர்த்தது தான் அதிசயம். இம்மட்டுக்கும் நான் ஒன்றும் நூற்றுக்கணக்கில் அங்கே இசையமைக்கவில்லை, கொடுத்ததில் ஏராளம் ஹிட் அடித்து விட்டது என்கிறார் தன்னடக்கமாக வித்யாசாகர்.

மலையாளத்தில் அவரின் “அழகிய ராவணன்” அறிமுகமே முதன் முதலாக வித்யாசாகருக்குக் கிட்டிய மாநில விருது என்ற அங்கீகாரம்.

புதையல் படத்தில் மம்மூட்டி நடித்த போது அந்தப் படத்தின் பாடல்களில் மயங்கி அழகிய ராவணன் படத்தின் இசையமைப்பாளராக அழைத்து வந்த பின்னணியே பின்னாளில் கேரளத்தின் முடிசூடா மன்னனாக வித்யாசாகரை இருத்தி வைத்தது.

இங்கே மலையாளத்தை இழுத்து வரக் காரணம் செங்கோட்டை படத்தில் எஸ்பிபி & எஸ்.ஜானகி பாடிய “பூமியே பூமியே” பாடல் பின்னாளில் மலையாள ரசிகர்கள் வித்யாசாகரைக் கோயில் கட்டிக் கும்பிடாத குறையாகக் கொண்டாடிய “சம்மர் இன் பெதலஹம்” படத்தில் “எத்ரையோ ஜென்மமாய்” (ஶ்ரீனிவாஸ் & சுஜாதா) என்று மறுபிறப்பெடுத்தது. புத்தம் புதுசு போல அப்போதிருந்து இன்னும் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள் கடவுள் தேசத்தவர்.

“அழகூரில் பூத்தவளே....

 என்னை அடியோடு சாய்த்தவளே....”

அந்தப் பெருமூச்சு எஸ்பிபி குரல் அறிவுமதி அவர்களின் வரிகளுக்கு உயிர் மூச்சாய் வெளிப்பட்ட போது, வித்யாசாகர் என்ற இசையமைப்பாளர் கால மாறுதல்களுக்கு ஏற்பப் புதுப்புதுக் குரல்களைக் கொண்டு வந்தாலும் எஸ்பிபி அதற்கெல்லாம் விதிவிலக்கு என்று நிறுவியது.

“ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும்” கோயம்புத்தூர் மாப்பிள்ளை படத்துக்காக இந்தப் பாடலை வடிவமைத்தபோது வித்யாசாகரோ, விஜய்யோ நினைத்துப் பார்த்திருப்பார்களா மறுவெளியீட்டிலும் வசூல் சாதனை படைத்த “கில்லி” வழியாகச் சொல்லி அடிப்போம் என்று. வித்யாசாகர் – விஜய் ஒரு தனிக்கூட்டணி.

"மலரே மெளனமா" பாடல் எத்திசையில் ஒலித்தாலும் அந்தப் பாட்டுக்குள் போய் அங்கேயே தங்கி விட்டுத் தான் திரும்பும் மனது.

இன்றைக்கு இசைப் போட்டிகளில் அடுத்த தலைமுறைப் பாடகராக வருபவர்களுக்கு அரசு அங்கீகரிக்காத பாடம் இந்தப் பாட்டு. இந்தப் பாட்டின் நுட்பம் தெரிந்து அதைப் பாதிக் கிணறு கடப்பவரே கரை சேர்ந்து விடுவார்கள்.

"மெளனமா" என்ற சொல்லை மட்டும் வைத்துப் கேட்டாலே பாடலில் இது ஒலிக்கும் போதெல்லாம் வேறுபடும் சாதாக வெளிப்பாடே ஒரு உதாரணம்.

பாடலின் வரிகளை நோகாமல் கொண்டு சேர்க்கும் திறன் எல்லாம் படைப்பின் உன்னதத்தை மிகாமல் காப்பாற்றுகின்றன.பதிவு கானாபிரபா

இந்தப் பாடலில் இருக்கும் உணர்வோட்டமே பாட்டு முடிந்த பின்னும் நாதம் போல உள்ளுக்குள் அடித்துக் கொண்டிருக்கும்.

அளவு கடந்த நேசத்தை எப்படி நோகாமல் வெளிப்படுத்த முடியும் இவர்களின் குரல்கள் அனுபவித்து அதைக் கடத்துகின்றது?

தெலுங்கில் முன்பே இசைத்த பாட்டு ஆனால் அங்கே அதைச் சரிவரப் பயன்படுத்தாததால் “ஜெய் ஹிந்த்” படத்தின் பாடல் பதிவு செய்யும் போது அர்ஜீனிடம் இந்தப் பாட்டின் மெட்டைப் பரிந்துரைத்தாராம் வித்யாசாகர். இந்தப் படத்தில் வேண்டாம் அடுத்த படத்தில் வைத்துக் கொள்வோம் என்றாராம் அர்ஜீன். அது போலவே மறக்காமல் கர்ணா படத்தின் பாடல் பதிவில் இந்தப் பாடலை வேண்டிப் பெற்றுக் கொண்டாராம். கர்ணா கொடுத்த புகழால் இதே பாட்டு தெலுங்கில் மீளவும் போனது இம்முறை வெகு பிரபலம் என்ற அடையாளத்தோடு, (தெலுங்கில் மனோ)

பின்னாளில் கன்னடத்தில் இதே எஸ்பிபி & எஸ்.ஜானகி கன்னடத்தின் முன்னணி நாயகன் சிவராஜ்குமாரின் “கங்கா ஜமுனாவிலும்” பாடினார்கள் அச்சொட்டாக.

“காற்றின் மொழி ஒலியா இசையா” கேட்டாலே நெகிழ்ந்து உருக வைத்துக் கரைத்து விடும் பண்பு கொண்டது. ராதாமோகன் போன்றவர்கள் வித்யாசாகரின் மெல்லிசைக் கதவுகளை அகலத் திறந்தவர்களில் ஒருவர் என்றால் தரணி தன் ஆக்ரோஷமான படங்களில் அந்த மெலடிக்கு ஒரு சரியாசனம் கொடுப்பார்.

“புல்வெளி ஆகிறேன் இப்பொழுது....” என்று ஆசை ஆசை பாடல் நினைவில் மிதந்து வரும் இதை நினைக்கும் போது.

வித்யாசாகர் ஒரு ஃபீனிக்ஸ் பறவை போல, தமிழில் திடீரென்று வந்து போவார். அல்லாதவிடத்து மலையாளத்திலோ தெலுங்கிலோ இந்த ஃபீனிக்ஸ் பறவை மையம் கொண்டிருக்கும்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் இன்னிசை இளவரசன் வித்யாசாகர்

கானா பிரபா

02.03.2025